உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இலச்சினை பிறந்த கதை
உயர்ந்தோங்கிய கம்பீர வள்ளுவர் சிலை. பின்னணியில் சீறிப் பாயும் சுனாமி அலை. மேலே வானவில்லின் ஏழு வண்ணங்கள் போல் வளையும் தொல்லியல் தரவுகள். வள்ளுவரின் காலடியில் கல்வெட்டுச் சாயலுடன் விளங்கும் கலைஞரின் கையெழுத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ என்ற குறள். வட்ட வடிவில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அது-கோவையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை.
அந்த இலச்சினையை வடிவமைத்தவர் ஓவியர் சந்ரு. இவர் சென்னை எழும்பூர் கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். “அந்த இலச்சினை என் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. அதற்காக கிட்டத்தட்ட் ஒரு மாதம் உழைத்தோம்” என்று ஆரம்பித்தவர், அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யங்களைக் கூறத தொடங்கினார். “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றிய அறிவிப்பு வந்தவுடன் தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் என்னைத் தொடர்பு கொண்டார். ‘செம்மொழி மாநாட்டுக்காக ஒரு இலச்சினை வடிவமைக்க வேண்டும். அதனை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும். அதில் வள்ளுவர் இடம் பெற வேண்டும். நமது மொழியின் பெருமை, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வெளிப்படுத்துவதாக அந்த இலச்சினை இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
இலச்சினையில் வள்ளுவர் சிலை வைப்பதற்காக பல்வேறு இடங்களில் வள்ளுவர் புகைப்படங்களைத் தேடினோம். நான் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் புகைப்படங்கள் திருப்தியாக அமையவில்லை. அதன் பிறகு இணையத்தில் போய்த் தேடிய போதுதான் இப்போதிருக்கும் வள்ளுவர் சிலை கிடைத்தது. அந்த சிலை பிரம்மாண்டத்தையும் கம்பீரத்தையும் மட்டுமல்ல, மனசுக்கு எதோ ஒரு வகையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியதும் அந்தப் புகைப்படத்தை நான் தேர்வு செய்ததற்கு ஒரு காரணம். மற்றவர்களிடம் காட்டிய பொது அவர்களுக்கும் அந்த சிலை பிடித்து விட்டது. அதன் பிறகு வள்ளுவரை மையமாக வைத்து இலச்சினை வடிவமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.
15 நாட்களில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட இலச்சினைகளை வடிவமைத்தோம். சிலம்பு வடிவிலும், சதுரமாகவும், வட்டமாகவும் தோன்றியபடியெல்லாம் செய்தோம். பிராமி எழுத்தை பின்னணியாக வைத்தும், ஐந்திணையை அடிப்படையாக வைத்தும், தமிழ் மொழியின், இனத்தின் செம்மையை உணர்த்தும் தொல்லியல் இலச்சினைகளைப் பின்னணியாக வைத்தும்… இப்படி ஏராளமாக செய்தோம்.
இறுதியில் ராஜேந்திரனிடம் அவற்றைக் காட்டினோம். அவர் ‘இன்னும் கொஞ்சம் செய்து பார்க்கலாமே’ என்றார். பிறகு, ‘இந்த இலச்சினைகள் தமிழின் பெருமைகளை வெளிப்படுத்துகின்றன. இது தவிர, அதன் அழியா நிலைத்த தன்மை இந்த இலச்சினையில் வெளிப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். ‘எந்தப் பேரழிவையும் தாண்டி நிற்கும் சக்தி கொண்டது தமிழ் என்ற பொருள் வரவேண்டும்’ என்று அவர் கூறிவிட்டு, ‘பேரழிவுக்கு சமீபத்திய உதாரணம் சுனாமி. அதையே பின்னணியாய் வைக்கலாமா?’ என்று கேட்டவர், ‘பாசிட்டிவ்வான ஒரு நிகழ்சசியின் இலச்சினையில், நெகட்டிவ்வான அழிவு சார்ந்த ஒரு அடையாளத்தை வைத்தால், யாரவது விமர்சனங்கள் செய்வார்களா?’ என்று தயக்கத்துடன் கேட்டார். எனக்கு ராஜேந்திரனின் யோசனை பிடித்திருந்தது. ‘தமிழும் வள்ளுவமும் எந்த எதிர்ப்புப் பேரலையையும் தாண்டி உலகுள்ளவரை வாழும் என்பதற்கு அடையாளமாக சுனாமியை பின்னணியாக வைத்தால் பொருத்தமாகத்தான் இருக்கும்’ என்று கூறி, வள்ளுவருக்குப் பின்னணியில் சுனாமியை கொண்டு வந்தேன்.
இதற்கு முன் நாங்கள் செய்திருந்த டிசைன்களை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்து விட்டுப் புதிதாக பிபோதிருக்கும் இலச்சினையை வடிவமைக்க ஆரம்பித்தோம். இஅச்சிநையை வடிவமைத்த பிறகு இதில் ஒரு கேப்ஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ‘என்ன கேப்ஷன் வைக்கலாம்?’ என்று நான் ராஜேந்திரனிடம் கேட்டபோது முதல்வரைக் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். அவர் முதல்வரைச் சந்தித்து இலச்சினையைக் காட்டியபோது, தனக்குப் பிடித்திருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்போது முதல்வர் எழுதிக் கொடுத்த கேப்ஷன்தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’
ராஜேந்திரன், கலைஞர் எழுதிக் கொடுத்ததைக் கொண்டுவந்து கொடுத்து, ‘இந்தக் கையெழுத்தையே இலச்சினையில் வைத்து விடலாமே’ என்று கூறினார். சித்திர தன்மையுடன் கூடிய அந்தக் கையெழுத்தை இலச்சினையில் மையத்தில் வைத்தோம்.
அதன்பிறகு, இலச்சினை இறுதி செய்யப்பட்டு, அது முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதல்வருக்கு இலச்சினை பிடித்திருந்தது. இருந்தாலும் நாங்கள் இலச்சினையில் வைத்திருந்த தொல்லியல் தரவுகள் சரியானவைதானா என்று கேட்டவர், அதனை ஐராவதம் மகாதேவனிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு ஐராவதத்திடம் இலச்சினை காட்டப்பட்டு அந்தத் தரவுகள் சரியானவைதான் என்று அவர் உறுதி செய்த பிறகு, அது தலைமைச் செயலகத்தில் வைத்து ஐராவதம் அவர்களால் வெளியிடப்பட்டது. இதுதான் இலச்சினை பிறந்த கதை.” என்றார் சந்ரு.
“இலச்சினையின் மேலே தொல்பொருள் தரவுகள் பதிக்கபட்டுல்ல்னவே, அவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டோம்.
“இது ஒரு குழு முயற்சி. இந்த இலச்சினை வடிவமைப்பில் என்னுடன் உறுதுணையாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் ராமச்சந்திரன். இவர் விஸ்காம் படித்தவர். ஆனாலும் தொல்லியலில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அது குறித்த ஆழ்ந்த அறிவுள்ளவர். இலச்சினை மேலே வைக்கப்பட்டுள்ள ஏழு தரவுகளும் அவரது தேர்வுகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டன. இன்னொருவர் மணிவண்ணன். இந்த அளவுக்கு இலச்சினையின் டிசைன் அழகாக வந்ததற்கு இவர்தான் காரணம். தொல்லியல் தரவுகள் குறித்து ராமச்சந்திரனிடம் கேளுங்கள்” என்றார்.
ஓவர் டூ ராமச்சந்திரன்.
“முதலில் இலச்சினையின் மேலே முன்று தரவுகள் வைக்கலாமா? ஐந்து வைக்கலாமா? என்று பலவாறு யோசித்த போது, வானவில்லின் ஏழு தரவுகளை வைக்க முடிவு செய்தோம். ஏழு என்பதற்கு ‘எழு’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். எனவே நமது இனம், மொழி எழுந்து நிற்க வேண்டும் என்ற உள்ளர்த்தத்தில் எழு பகுதிகளாக இலச்சினையின் மேல் பகுதியைப் பிரித்தோம். நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றிலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையான ஏழினை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகுந்த சவாலான விஷயமாகத்தான் இருந்தது. இது தவிர, நாங்கள் பயன்படுத்தும் தரவுகள் நமது தனித்தன்மையைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதால் சிந்துசமவெளியில் கண்டெடுக்கப் பட்ட இலச்சினைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பரவலாக உள்ளன. எனவே, திராவிட விழுமியங்களை மட்டுமே தனித்துவப்படுத்தும் தரவுகளான ஹரப்பாவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளை மட்டுமே நாங்கள் இந்த மாநாட்டு இலச்சினையில் பயன்படுத்தியுள்ளோம்.
ஆயிரக்கணக்கான ஹரப்பா தரவுகளில் இருந்து நமது பன்முகத் தன்மையைச் சொல்லும் விதமாக தமிழ்மொழி, தமிழ் இனத்தின் தனித்தனி அடையாளங்களைக் குறிக்கும் வகையில் எழுத் தரவுகளைத் தேர்ந்தெடுத்தோம். இதற்காக பல்வேறு அறிஞர்களைத் தேடிச் சென்று சந்தித்துப் பல்வேறு விஷயங்களைக் கலந்து பேசி… சாப்பிடக்கூட நேரமில்லாமல் உழைத்தோம். இதில் முதல் தரவு-குலமுதல்வன். சிலர் இதனை சிவன் என்பார்கள். நமது மூதாதையர் வழிபட்ட கடவுள். இரண்டாவது தரவு-அசைவுறும் ஆடு. உலகளவில் அசையும் நிகழ்வை முதன்முதலில் பதிவு செய்த புடைப்புச் சிற்பம் இது. இந்த சிற்பத்துக்கு முன்பு, மனிதன் அசைவில்லாக் காட்சிகளை மட்டுமே புடைப்புச் சிற்பங்களாக வடித்து வந்தான். உலக அளவில் அசையும் சித்திரமாய் ஒரே உருவத்தை வெவ்வேறு கோணத்தில் அசைவதுபோல் வடிவமைக்கப்பட்ட சிற்பம் இது. இப்போதைய மொழியில் சொல்லப் வேண்டுமென்றால் அனிமேஷன் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது தரவு-காளை. நமது வேளாண் தொழில், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கொண்டது. இந்தக் காளைச் சிற்பம் நமது வேளாண் தொழிலின் தொன்மையையும் சிறப்பையும் உணர்த்துகிறது. நான்காவது தரவு-சுக்கானுடன் கூடிய கப்பல். நமது அயல்நாட்டு வாணிகச் சிறப்பை உணர்த்துகிறது. சிந்து சமவெளி நாகரிகம் கடலோரப் பரப்பைச் சார்ந்து வளர்ந்த நாகரிகம். குஜராத் பகுதியில் உள்ள லோத்தல் பகுதியில் கிடைத்த மிகப்பழைமையான துறைமுகம், கடல் வணிகத்தில் நாம் முன்னணியில் இருந்ததைச் சாட்சிப்படுத்திறது. தமிழனின் நெடுங்கடல் திசையறிவு, அஞ்சாமை, கடல் சார்ந்த நெய்தல் வாழ்க்கை போன்ற பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் விதமாக அந்தத் தரவைப் பயன்படுத்தினோம். ஐந்தாவது தரவு -கொம்புடைய கலைமான். நமது கலையின் பெருமையை உணர்த்தும் விதமாக இதனைப் பயன்படுத்தியுள்ளோம். ஆறாவது தரவு-சங்க இலக்கியத்தில் புறத்திணையில் வரும் வேலன் வெறியாட்டுக் குறித்தது. அதன் அடையாளமாக இந்தத் தரவைப் பயன்படுத்தினோம். ஏழாவது தரவு-நிரருந்தும் காளை. எழு தரவுகளையும் நமது வாழ்க்கை முறை, கலாச்சாரம் ஆகியவற்றின் சிறப்பான விழுமியங்களை எடுத்துக்கூறும் வகையிலேயே தேர்வு செய்தோ..” என்றார் ராமச்சந்திரன்.







why dont u update the blog more often.. 2 months is a biggggg time in blogging world.. i guess..