The Three Mistakes of My Life , நிலா நிழல் மற்றும் சுஜாதா
சேத்தன் பகத்தின் “The Three Mistakes of My Life” நாவல் படித்தேன். மூன்று நண்பர்களின் வாழ்க்கையை கொஞ்சம் கிரிக்கெட்,காதல், வியாபாரம், நிலநடுக்கம், மதக் கலவரம் என்று கலந்து நன்றாக எழுதி இருந்தார். அவரது முதல் நாவல் “Five Point Someone – What not to do at IIT” நம்பக் கூடிய கதை. அடுத்த நாவலான “One Night @ the Call Center” நம்ப முடியாததாக இருந்தது. மூன்றாவதான இந்த நாவல் முந்தைய இரண்டிற்கும் இடைப்பட்டதாக உள்ளது.
இதைப் படித்ததும் என் நினைவிற்கு வந்த மற்றொரு நாவல் சுஜாதாவின் “நிலா நிழல்”. “The Three Mistakes of My Life” -ல் இருந்த நிலநடுக்கம், மதக் கலவரம் இதில் இல்லை. ஆனால் அதைவிட மிக சுவாரஸ்யமான கதையும், எழுத்து நடையும் கொண்டது. திருச்சியில் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது தில்லை நகர் திடலில் புத்தகக் கண்காட்சி நடந்தது. யாரும் கூட வராத நிலையில் தனியாக சென்றேன். இந்தப் புத்தகமும், அப்துல் ரகுமானின் “பித்தன்” புத்தகமும் வாங்கினேன். இந்தப் புத்தகம் வாங்கிய நோக்கம் புத்தகத்தின் பின்னால் இருந்த இந்த வாக்கியம்.
“குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான நிலா நிழல், குழந்தைப் பருவத்தை இழந்து இளமையை அடையும் காலத்தின் வேட்கையையும் கனவையும் கவித்துவத்துடன் வரைந்து செல்கிறது.”
நாமளும் அந்த ஸ்டேஜ்லதான இப்போ இருக்கோம். ஏதாவது படிச்சி தெரிஞ்சிக்கலாம்னுதான் வாங்கினேன். இந்த புத்தகம் வாங்கும் வரை நான் படித்த சுஜாதாவின் எழுத்துகள் விகடனில் வெளிவந்த “கற்றதும் பெற்றதும்”, “ஸ்ரீரங்கத்து தேவதைகள்”. இதுதான் அவர் எழுதி நான் படித்த முதல் நாவல். கூட்டம் இல்லாத ரம்பா தியேட்டரில் “பாண்டவர் பூமி” கடைசிக் காட்சி தனியாக பார்த்து விட்டு ரூம் வந்தபோது ரொம்ப லேட்டாகிவிட்டது. தூக்கம் உடனே வரவில்லை. சரி இந்த புத்தகத்தைப் படிப்போம் தூக்கம் வரும் என்று நம்பினது தப்பா போச்சு. முழு புத்தகமும் படித்து விட்டுதான் தூங்கச் சென்றேன்.
இரண்டு வாரத்திற்கு முன் வீட்டிற்கு சென்ற போது தேடிப் பிடித்து, மின் வெட்டு, ஒலிபெருக்கியில் “வெளிநாடு ஒன்றில் பெட்ரோலின் விலை பத்து ரூபாய். ஆனால் நம் நாட்டில்…” என்று கூவிக் கொண்டிருந்த அரசியல் கட்சிக் கூட்டக் கூச்சலுக்கு நடுவில் மீண்டும் படித்து முடித்தேன். இந்த முறை கதையை மேலும் ரசிக்க முடிந்தது. காரணம் கதையில் வரும் மும்பை காட்சிகளும் எனது நான்கு வருட மும்பை வாசமும்தான். முகூந்தன் என்னும் நம் கதை நாயகன் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவன். எப்படி அவன் தனது கண்டிப்பான தந்தையை மீறி ஸ்ரீரங்கத்தில் இருந்து மும்பை சென்று விளையாடுகின்றான், அங்கே எப்படி காதல் வயப்படுகின்றான் என்பதுதான் கதை. திரைப்படம் எடுக்கத் தோதுவானது. கிரிக்கெட் ஆகட்டும், மும்பை ஆகட்டும் அவரின் ஆழ்ந்த அறிவும், அதை எளிமையாக விளக்கிச் சொல்லிய விதமும் எத்தனை பாராட்டினாலும் தகும். இது போதாதென்று இரண்டு மூன்று கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் வேறு. இன்றிலிருந்து 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த நாவல் எப்படி இன்று படித்தாலும் புத்தம் புதிதாய் உள்ளது என்பதே சுஜாதாவின் எழுத்துக்கான வெற்றி.
சுஜாதா பற்றி சுஜாதாவே ஒரு பத்திரிக்கையில் கூறியது…
**********************************
‘பாலம்’ என்கிற கதை விகடனில் வெளிவந்தபோது அது ஒரு திருப்புமுனையாக என் எழுத்து வாழ்வில் அமைந்தது. ஓரளவுக்கு சிறுகதைத் தந்திரங்கள் பிடிபட்டு விட்டன. ‘அதிர்ச்சி’க்கும் ‘பாலம்’ கதைக்கும் இடையே ஆறு ஆண்டுகள் நிறைய தமிழ், ஆங்கிலச் சிறுகதைகள் படித்தேன். நான் படித்த அனைவரும் என் எழுத்தின் துரோணர்கள். நான் சைன்ஸ் படித்தவன். இயற்பியல் மாணவன். தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்தவன். ஸ்ரீரங்கத்துச் சூழ்நிலை, கட்டுப்பாடான நாட்கள், ஏழ்மையுமில்லாத பணக்காரத்தனமும் இல்லாத நடுவாந்தர வசதிகள், பிரபந்தத் தமிழ் இவை அனைத்தையும் கலந்து ஒரு மிக்ஸி சுழற்றலில் ஒரு எழுத்தாளன் உருவானால் அது நான்.
**********************************





