கொக்குக் குஞ்சுகளும் மூன்று நாட்களும் – பகுதி II
மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை சனி, ஞாயிறு மற்றும் திங்கள், மஹாராஷ்டிர புத்தாண்டான ‘குடி படுவாவை’ முன்னிட்டு. யோசித்து வைத்திருந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதில் ஒரு வருத்தம். ‘பித்தல்கோரா’ குகைக் கோயில்களுக்குச் சென்றுவிட்டு, ஒளரங்காபாத் செல்லலாம் என்ற திட்டம்தான் அது. சில தகவல்கள், எதிர்பார்த்த நண்பனிடம் இருந்து சரியான நேரத்தில் வந்திருந்தால் கிளம்பி இருப்பேன் இதை எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். “எல்லோரா” குகைக் கோயிலின் சிறிய புகைப்படத்தை தவறுதலாக “மஹிம்சால்” எனக் கொண்டதால் அங்கு செல்லும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் உண்மை தெரிந்தபின் அந்த விருப்பம் புஸ்ஸாகிவிட்டது. உண்மைகள் எப்போதும் சுவாரஸ்யமற்றதாக இருப்பது ஏன் என்று இன்று வரை புரியவில்லை.
சனிக்கிழமை சிறிது ஓய்வெடுத்துவிட்டு (வேறென்ன தூக்கம்தான்!!!) மதியம் அல்லது சாயும் காலம் கோட்டை பகுதி மார்கெட்டுக்குச் சென்று அடுத்த வாரம் கேரளாவில் நடக்கவிருக்கும் நண்பனின் திருமணத்திற்கு ஏதேனும் புராதனமான பொருள் பரிசளிக்க வாங்கலாம் என்று அடுத்த திட்டம் தீட்டப்பட்டது. இது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும் நண்பனை கைபேசியில் இணைத்தேன். அரைமனதோடு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுவதாகக் கூறினான். ஆனால் கூப்பிடவில்லை. நேரம் கடந்து நான் கூப்பிட்ட போது வரவில்லை என்று கூறினான். தனியாகவே போயிருந்திருக்கலாம். ஏனோ அதுவும் செய்யவில்லை. சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ மேல் குற்றம் சாட்டலாம். இப்படி குற்றம் சாட்டுவதை எத்தனை நாட்கள் செய்ய முடியும்.
பல நாட்கள் கழித்து இப்படி சும்மா இருந்ததால் ரொம்ப போர் அடித்தது. கைபேசியில் சில உரையாடல்கள் செய்து பார்த்தேன். எதுவும் வேலைக்காகவில்லை. இறுதியில் கல்கியின் ‘சோலைமலை இளவரசி’ துணை கொடுத்தாள். வித்தியாசமான கதை சொல்லும் பாங்கு. மன்னர்கள் காலத்து சரித்திரத்தையும், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் ஒரே கதையில் கொண்டு வந்திருந்தார் கல்கி அவர்கள். அவரது சீரான நடையில் ஒரு கவர்ச்சி. அதில் வரும் காதலில் ஒருவித ஈடுபாடு. முடிவை யூகிக்க முடிந்த போதும், படிக்கும் ஆர்வம் சிறிதும் குறையவில்லை. சிறிய மாற்றங்களுடன், ஏறக்குறைய எதிர்பார்த்த முடிவு. இருந்தாலும் கல்கி தனது பெயரை நிலை நாட்டி உள்ளார்.
மகிழ்வுந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது எதாவது திரைப்படம் பார்க்கலாம் என்ற எண்ணம் தொற்றிக் கொண்டது. இரவு பதினொன்றரை மணிக்கு கடைசி காட்சி. இரண்டு நண்பர்களைக் கூப்பிட்டுப் பார்த்தேன். வரவில்லையென்று தாழ்மையுடன் மறுத்து விட்டனர். சரி நல்லதாய் போயிற்று என்று ஒரு ஊத்தப்பமும், இஞ்சி – எலுமிச்சை பழச்சாறும் குடித்து விட்டு தியேட்டருக்கு கிளம்பினேன். தனது ஐந்து வயது பையனுடன், வேலை இல்லாமல், இருக்க வீடு இல்லாமல் கையில் பணம் இல்லாமல், இலட்சியத்துடன் பாடுபட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் பற்றிய திரைப்படம். நல்ல கதைக்களம், காட்சி அமைப்புகள், திரைக்கதை, நல்ல நடிப்பு. ஒரு துளி கண்ணிர், சின்ன புன்னகையுடன் நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியுடன் திரையரங்கத்தை விட்டு வெளியேறினேன்.
தொடரும்…





