கொக்குக் குஞ்சுகளும் மூன்று நாட்களும் – பகுதி I
இதை நான் எழுதியது 19-மார்ச் 2007.
அழகழகான மூன்று கொக்குக் குஞ்சுகள் அவைகளைப் பெற்றோருடன் விளையாடிக் கொண்டிருந்தன. நான்காவது மாடியில் இருந்த எங்கள் அபார்ட்மன்டின் அருகில் வளர்ந்திருந்த மரத்தில் அவற்றின் வீடு. இளங்காலைக் கதிரவனின் கதிர்கள் வருட ‘Backlitted’ குஞ்சுகள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தன. மும்பை மாநகரிலே அபார்ட்மன்ட் அருகில் மரங்களா? என்று ஆச்சரியப்படலாம். முலுன்ட் (Mulund) எனப்படும் புறநகர்களின் இளவரசன் ராஜ்ஜியத்தில் இந்த அதிசயத்தைக் காண முடியும். அதுவும் இரயில் நிலையத்தின் கிழக்குப் பக்கம் உள்ள பகுதியில் நிறைய மரங்கள். வீட்டு வாடகை கொஞ்சம் அதிகமானாலும் நானும் என் நண்பனும் இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் அதிர்ஷ்டத்தின் உயரமாக(Height of luck) வீட்டோடு வந்த மாடியையும் சொல்ல வேண்டும்.வீடு அவ்வளவு சுத்தமாக இல்லாவிட்டாலும் பறவைகளின் இன்னிசையோடான அதிகாலையையும், அபார்ட்மன்டுகளுக்கு நடுவில் அஸ்தமிக்கும் சூரியனையும் ரசிக்க முடியும்.அது மட்டுமல்லாது கீழே செல்லும் சாலையிலும் ‘காட்சிகள்’ நன்றாகவே காணக் கிடைக்கும். அரைமணி நேரம் கவனித்தால் இருபது, முப்பது இளம் மற்றும் அழகான மும்பை பெண்களின் தரிசனம் Bird’s Eye View’-ஆக கிடைக்கும்.
சில நாட்களாக கீழே பறவைகள் பார்ப்பதை விட்டுவிட்டு சம உயரத்தில் நிஜப் பறவைகளான கொக்குகள் கூடு கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கோடைக்காலம் சற்று முன்கூட்டியே வந்து ‘Hi’ சொல்லிக் கொண்டிருந்ததால் மரங்கள் வெகு சீக்கிரமாக இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன.முதலில் கண்ணுக்குத் தெரிந்திராத கூடுகள் இப்போது இலைகளற்ற மரங்களால் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருந்தன. பெண் கொக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் நாள் முழுவதும். சில நேரங்களில் எழுந்து உடற்பயிற்சி செய்யும், நின்ற வண்ணம் சிறகுகளை விரித்த வண்ணம் மயிர் கூச்செரியும் வண்ணம். ஆம் அதன் தலையில் ஒரு விஷேசக் கொண்டை. கொக்குகளிலும் பிராமணர்கள் உண்டோ? Hmm எந்த பிராமணன் கொண்டை வைத்திருக்கின்றான் இந்த நவயுகக் கலிகாலத்தில்.பிராமணர்கள் அல்லாதவர்கள்தான் இப்பொழுது முடி வளர்த்துக் கொள்கிறார்கள். கொண்டையும் வைத்துக் கொள்கிறார்கள் இந்த மும்பை மாநகரத்தில். மற்ற நகரங்களில் எப்படி என்று தெரியவில்லை.ரோட்டில் செல்லும் போது பல நேரம் குறை பட்டுக் கொள்ள நேர்கிறது. குடுமிகளையும், நீண்ட கூந்தல்களையும் பார்த்துத் தவறாக ‘சைட்’ அடித்துக் கொண்டதற்காக. பெரும்பாலான பெண்கள் கிராப்பு வைத்துக் கொள்வதும், பெரும்பாலான ஆண்கள் நீளமாக கூந்தல் வளர்த்துக் கொள்வதும்தான் இங்கு இப்பொழுது நாகரிகமாம்.
இது இருக்கட்டும்… நான் சொல்ல வருவது என்னான்னா… நாளைக்கு பார்க்கலாமே…





