பா.கே.ப!!!

•செப்டம்பர்7, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

பார்த்தது:

Oscar நாயகனுக்கு தமிழ் இசையுலகின் பாராட்டு விழா. இளையராஜா, M.S.விஸ்வநாதன், பாலமுரளி கிருஷ்ணா என இசை உலகின் ஜாம்பவான்கள் பலரும் ஒன்று திரண்டு திருவாளர் A.R.ரஹ்மானை ஏகமனதாக பாராட்டியதைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. ராஜா, MSV அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கேள்வி மேடையில் எழாமல் இல்லை. கடைசியில் ரஹ்மான், தான் எல்லாரது இசையின் கலவை என்றும் இரண்டு Oscar-கள் இந்திய இசைக்கு கிடைத்தது, அதை வாங்க மட்டுமே தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தன்னடக்கத்துடன் மொழிந்தது மிக மிக அருமை. இடையிடையே அவரது பாடல்கள் திரையிடப்பட்டன. அப்போது “கன்னத்தில் முத்தமிட்டால்” பாடல் வந்த போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்ததை மறுக்கமுடியாது. தேவி ஸ்ரீ பிரசாத் போன்றோரை மேடையேறி பேச வைத்தது கொஞ்சம் ஓவராக இருந்தது.

கேட்டது:

“வெண்ணிலா கபடிகுழு” திரைப்பட பாடல்கள். கடம் வித்வான் “விக்கு” விநாயக்ராம் அவர்களின் மைந்தர் திரு. செல்வ கணேஷ் அருமையாக இசையமைத்துள்ளார்.ஐந்து பாடல்களில் நான்கு பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்கும் ரகம். “லேசா பறக்குது”, “உயிரில் ஏதோ” பாடல்களில் நா.முத்துக்குமாரும், “பட பட” பாடலில் சினேகனும் கவிதை மழை பொழிந்துள்ளனர். பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் அருமை. சினிமாவில்தான் தாடி வச்சு அசிங்கமா இருந்தாலும் காதல் கைகூடுகிறது. நானும் தாடி வச்சிப் பார்க்கிறேன் ஒண்ணும் நடக்க மாட்டேங்கிது :(

பாடல் வரிகள் சில இங்கே:

“லேசா பறக்குது” பாடலில் இருந்து…

…காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மெளனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்..

…தத்தி தத்தி போகும் பச்சபுள்ள போல
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையிரேன் சொகமா…

தொண்டை குழி தாண்டி வார்த்தை வரவில்லை
என்னென்னவோ பேச உதடு நெனைச்சது
பார்வையைப் பார்த்ததும் இதமா பதறுது

“பட பட” பாடலில் இருந்து…

…இதுவரை தொடர்ந்த தனிமை இன்று
துண்டாய் துண்டாய் உடைகிறதே
விரல்கள் பிடித்து நடக்கும்போது
வலிகள் யாவும் மறைகிறதே …

படித்தது:

இரண்டு Oscar வாங்கிய A.R.ரஹ்மானை அனைவரும் புகழ்ந்து கொண்டிருக்க, இந்தியாவின் முதல் Oscar விருதின் உரிமையாளர் ரசுல் பூக்குட்டி மறக்கப் பட்டிருக்கிறார். The Hindu-வில் அவரது நேர்காணல் கட்டுரை போன வெள்ளிக் கிழமை படித்தேன். உடைந்த மனதுடன் அவரது நிலையைப் பற்றி கூறியிருந்தார். அந்த கட்டுரையிலிருந்து…

…What was perhaps not plausible, or at least envisaged, is the attitude of the Hindi film industry to Resul, who became not only the first Indian but the first Asian to get the sound mixing award. “I have won an Oscar for the country. Nobody had even won an Oscar for technical expertise from Asia over the past 80 years. In Los Angeles, I got a standing ovation, but in my own (Hindi) film industry where I have worked for 13-14 years, people did not even bother to call me. Soon after the Oscars, I got SMS and phone calls from Mohanlal and Mammootty, besides a number of luminaries from Malayalam cinema even though I have not worked there for long…

…How does Resul look at the future? I would like to direct a Malayalam film. In future, I am going to work more on international projects. I have got offers already but I will work on international projects out of Mumbai. I am an Indian. I will work from India. I belong here.”

And Resul belongs to all of us. Bring on the sounds of India.

முழு நேர்காணலையும் படிக்க இங்கே சொட்டவும் <a href=”http://blogs.thehindu.com/films/?p=5191″>An unsung hero !!!</a>

பா.கே.ப!!!

•செப்டம்பர்1, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

ஏதோ கெட்ட வார்த்தைனு தப்பா நினைச்சிடாதீங்க. வாரமலரில் வாராவாரம் அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது என தொடராக வந்தது(முன்னாடி படிச்சிருக்கேன்)…இப்பவும் வருது(நேற்றுதான் இணையத்தில் பார்த்தேன் – http://www.dinamalar.com/2008apr06varamalar/index.asp)… நாமும் இப்படி ஏதாவது பகிர்ந்துகிலாமேனுதான் இந்த பா.கே.ப.

பார்த்தது:
மங்களூர் நகரத்தில் இருந்து “முடிப்பு” கிராமம் வரை பேருந்து பயணத்தின் போது பார்த்தது.
அபார்ட்மண்ட் கீழே மாடர்ன் நைட்டி போட்டுகிட்டு ஒரு அக்கா (???) அவங்க பையனை மாருதி ஆம்னியில் பள்ளிக்கு அனுப்புறாங்க.

கானாச்சூர் பிரைவேட் லிமிடட் கம்பெனி வாயிலில் அப்பாவோடு பள்ளி செல்ல பேருந்திற்காக காத்திருக்கும் அக்கா, தம்பி.

சின்னதா ஒரு திண்ணை, வீட்டு வெளிச்சுவற்றில் கரும்பலகை. அதுக்கு எதிர்த்தாப்பில் ஒரு மரபெஞ்சில் வரிசையாக, முகம் மட்டும் தெரியும்படி பர்தா அணிந்த ஐந்து ஆறு சிறுமிகள். குல்லா, லுங்கி சகிதம் அவர்களுக்கு பாடம் எடுக்கும் வாத்தியார்.

மூன்று சிறுவர்கள், ஒரு சிறுமி – இடிந்து போன ஒரு நுழைவாயிலைத் தாண்டி. சின்ன காடு போன்ற இடத்திற்குள் முதுகு காட்டி நடந்து செல்கின்றனர். ஒரே ஒரு சிறுவன் மட்டும் பள்ளி சீருடை அணிந்திருந்தான்.

கேட்டது:
” நாக்க முக்க” புகழ் “காதலில் விழுந்தேன்” படத்தில் நல்ல கவிதைகளுடன் ரொம்ப நல்ல பாடல்கள் உள்ளன. குறிப்பா “தோழியா என் காதலியா”, “சொல்லடி என் இதயம்” இந்தப் பாடல்கள்.

“தோழியா என் காதலியா” பாடலில் இருந்து

இருட்டுகுள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போலே மாட்டிக் கொண்டேன்
இறுதி சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாயை உன் உருவில் தந்து விட்டான்

படித்தது:
எஸ்.ராமகிருஷ்ணன் அவரது வலைப்பூவில் கவிஞர் நகுலன் பற்றியும் அவரது பத்து கவிதைகளும் போட்டிருந்ததை படித்தேன். மிகவும் வித்தியாசமான ஒரு மனிதராக தென்பட்டார் நகுலன். அவரது சில கவிதைகள் இங்கே…

***
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.
***
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`
***
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
**
எனக்கு
யாருமில்லை
நான்
கூட..
***
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.
***

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இலச்சினை பிறந்த கதை

•ஜூன்22, 2010 • 1 மறுமொழி

உயர்ந்தோங்கிய கம்பீர வள்ளுவர் சிலை. பின்னணியில் சீறிப் பாயும் சுனாமி அலை. மேலே வானவில்லின் ஏழு வண்ணங்கள் போல் வளையும் தொல்லியல் தரவுகள். வள்ளுவரின் காலடியில் கல்வெட்டுச் சாயலுடன் விளங்கும் கலைஞரின் கையெழுத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ என்ற குறள். வட்ட வடிவில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அது-கோவையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை.

அந்த இலச்சினையை வடிவமைத்தவர் ஓவியர் சந்ரு. இவர் சென்னை எழும்பூர் கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். “அந்த இலச்சினை என் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. அதற்காக கிட்டத்தட்ட் ஒரு மாதம் உழைத்தோம்” என்று ஆரம்பித்தவர், அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யங்களைக் கூறத தொடங்கினார். “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றிய அறிவிப்பு வந்தவுடன் தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் என்னைத் தொடர்பு கொண்டார். ‘செம்மொழி மாநாட்டுக்காக ஒரு இலச்சினை வடிவமைக்க வேண்டும். அதனை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும். அதில் வள்ளுவர் இடம் பெற வேண்டும். நமது மொழியின் பெருமை, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வெளிப்படுத்துவதாக அந்த இலச்சினை இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

இலச்சினையில் வள்ளுவர் சிலை வைப்பதற்காக பல்வேறு இடங்களில் வள்ளுவர் புகைப்படங்களைத் தேடினோம். நான் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் புகைப்படங்கள் திருப்தியாக அமையவில்லை. அதன் பிறகு இணையத்தில் போய்த் தேடிய போதுதான் இப்போதிருக்கும் வள்ளுவர் சிலை கிடைத்தது. அந்த சிலை பிரம்மாண்டத்தையும் கம்பீரத்தையும் மட்டுமல்ல, மனசுக்கு எதோ ஒரு வகையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியதும் அந்தப் புகைப்படத்தை நான் தேர்வு செய்ததற்கு ஒரு காரணம். மற்றவர்களிடம் காட்டிய பொது அவர்களுக்கும் அந்த சிலை பிடித்து விட்டது. அதன் பிறகு வள்ளுவரை மையமாக வைத்து இலச்சினை வடிவமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.

15 நாட்களில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட இலச்சினைகளை வடிவமைத்தோம். சிலம்பு வடிவிலும், சதுரமாகவும், வட்டமாகவும் தோன்றியபடியெல்லாம் செய்தோம். பிராமி எழுத்தை பின்னணியாக வைத்தும், ஐந்திணையை அடிப்படையாக வைத்தும், தமிழ் மொழியின், இனத்தின் செம்மையை உணர்த்தும் தொல்லியல் இலச்சினைகளைப் பின்னணியாக வைத்தும்… இப்படி ஏராளமாக செய்தோம்.

இறுதியில் ராஜேந்திரனிடம் அவற்றைக் காட்டினோம். அவர் ‘இன்னும் கொஞ்சம் செய்து பார்க்கலாமே’ என்றார். பிறகு, ‘இந்த இலச்சினைகள் தமிழின் பெருமைகளை வெளிப்படுத்துகின்றன. இது தவிர, அதன் அழியா நிலைத்த தன்மை இந்த இலச்சினையில் வெளிப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். ‘எந்தப் பேரழிவையும் தாண்டி நிற்கும் சக்தி கொண்டது தமிழ் என்ற பொருள் வரவேண்டும்’ என்று அவர் கூறிவிட்டு, ‘பேரழிவுக்கு சமீபத்திய உதாரணம் சுனாமி. அதையே பின்னணியாய் வைக்கலாமா?’ என்று கேட்டவர், ‘பாசிட்டிவ்வான ஒரு நிகழ்சசியின் இலச்சினையில், நெகட்டிவ்வான அழிவு சார்ந்த ஒரு அடையாளத்தை வைத்தால், யாரவது விமர்சனங்கள் செய்வார்களா?’ என்று தயக்கத்துடன் கேட்டார். எனக்கு ராஜேந்திரனின் யோசனை பிடித்திருந்தது. ‘தமிழும் வள்ளுவமும் எந்த எதிர்ப்புப் பேரலையையும் தாண்டி உலகுள்ளவரை வாழும் என்பதற்கு அடையாளமாக சுனாமியை பின்னணியாக வைத்தால் பொருத்தமாகத்தான் இருக்கும்’ என்று கூறி, வள்ளுவருக்குப் பின்னணியில் சுனாமியை கொண்டு வந்தேன்.

இதற்கு முன் நாங்கள் செய்திருந்த டிசைன்களை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்து விட்டுப் புதிதாக பிபோதிருக்கும் இலச்சினையை வடிவமைக்க ஆரம்பித்தோம். இஅச்சிநையை வடிவமைத்த பிறகு இதில் ஒரு கேப்ஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ‘என்ன கேப்ஷன் வைக்கலாம்?’ என்று நான் ராஜேந்திரனிடம் கேட்டபோது முதல்வரைக் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். அவர் முதல்வரைச் சந்தித்து இலச்சினையைக் காட்டியபோது, தனக்குப் பிடித்திருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்போது முதல்வர் எழுதிக் கொடுத்த கேப்ஷன்தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’

ராஜேந்திரன், கலைஞர் எழுதிக் கொடுத்ததைக் கொண்டுவந்து கொடுத்து, ‘இந்தக் கையெழுத்தையே இலச்சினையில் வைத்து விடலாமே’ என்று கூறினார். சித்திர தன்மையுடன் கூடிய அந்தக் கையெழுத்தை இலச்சினையில் மையத்தில் வைத்தோம்.

அதன்பிறகு, இலச்சினை இறுதி செய்யப்பட்டு, அது முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதல்வருக்கு இலச்சினை பிடித்திருந்தது. இருந்தாலும் நாங்கள் இலச்சினையில் வைத்திருந்த தொல்லியல் தரவுகள் சரியானவைதானா என்று கேட்டவர், அதனை ஐராவதம் மகாதேவனிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு ஐராவதத்திடம் இலச்சினை காட்டப்பட்டு அந்தத் தரவுகள் சரியானவைதான் என்று அவர் உறுதி செய்த பிறகு, அது தலைமைச் செயலகத்தில் வைத்து ஐராவதம் அவர்களால் வெளியிடப்பட்டது. இதுதான் இலச்சினை பிறந்த கதை.” என்றார் சந்ரு.

“இலச்சினையின் மேலே தொல்பொருள் தரவுகள் பதிக்கபட்டுல்ல்னவே, அவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டோம்.

“இது ஒரு குழு முயற்சி. இந்த இலச்சினை வடிவமைப்பில் என்னுடன் உறுதுணையாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் ராமச்சந்திரன். இவர் விஸ்காம் படித்தவர். ஆனாலும் தொல்லியலில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அது குறித்த ஆழ்ந்த அறிவுள்ளவர். இலச்சினை மேலே வைக்கப்பட்டுள்ள ஏழு தரவுகளும் அவரது தேர்வுகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டன. இன்னொருவர் மணிவண்ணன். இந்த அளவுக்கு இலச்சினையின் டிசைன் அழகாக வந்ததற்கு இவர்தான் காரணம். தொல்லியல் தரவுகள் குறித்து ராமச்சந்திரனிடம் கேளுங்கள்” என்றார்.

ஓவர் டூ ராமச்சந்திரன்.

“முதலில் இலச்சினையின் மேலே முன்று தரவுகள் வைக்கலாமா? ஐந்து வைக்கலாமா? என்று பலவாறு யோசித்த போது, வானவில்லின் ஏழு தரவுகளை வைக்க முடிவு செய்தோம். ஏழு என்பதற்கு ‘எழு’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். எனவே நமது இனம், மொழி எழுந்து நிற்க வேண்டும் என்ற உள்ளர்த்தத்தில் எழு பகுதிகளாக இலச்சினையின் மேல் பகுதியைப் பிரித்தோம். நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றிலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையான ஏழினை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகுந்த சவாலான விஷயமாகத்தான் இருந்தது. இது தவிர, நாங்கள் பயன்படுத்தும் தரவுகள் நமது தனித்தன்மையைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதால் சிந்துசமவெளியில் கண்டெடுக்கப் பட்ட இலச்சினைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பரவலாக உள்ளன. எனவே, திராவிட விழுமியங்களை மட்டுமே  தனித்துவப்படுத்தும் தரவுகளான ஹரப்பாவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளை மட்டுமே நாங்கள் இந்த மாநாட்டு இலச்சினையில் பயன்படுத்தியுள்ளோம்.

ஆயிரக்கணக்கான ஹரப்பா தரவுகளில் இருந்து நமது பன்முகத் தன்மையைச் சொல்லும் விதமாக தமிழ்மொழி, தமிழ் இனத்தின் தனித்தனி அடையாளங்களைக் குறிக்கும் வகையில் எழுத் தரவுகளைத் தேர்ந்தெடுத்தோம். இதற்காக பல்வேறு அறிஞர்களைத் தேடிச் சென்று சந்தித்துப் பல்வேறு விஷயங்களைக் கலந்து பேசி… சாப்பிடக்கூட நேரமில்லாமல் உழைத்தோம். இதில் முதல் தரவு-குலமுதல்வன். சிலர் இதனை சிவன் என்பார்கள். நமது மூதாதையர் வழிபட்ட கடவுள். இரண்டாவது தரவு-அசைவுறும் ஆடு. உலகளவில் அசையும் நிகழ்வை முதன்முதலில் பதிவு செய்த புடைப்புச் சிற்பம் இது. இந்த சிற்பத்துக்கு முன்பு, மனிதன் அசைவில்லாக் காட்சிகளை மட்டுமே புடைப்புச் சிற்பங்களாக வடித்து வந்தான். உலக அளவில் அசையும் சித்திரமாய் ஒரே உருவத்தை வெவ்வேறு கோணத்தில் அசைவதுபோல் வடிவமைக்கப்பட்ட சிற்பம் இது. இப்போதைய மொழியில் சொல்லப் வேண்டுமென்றால் அனிமேஷன் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது தரவு-காளை. நமது வேளாண் தொழில், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கொண்டது. இந்தக் காளைச் சிற்பம் நமது வேளாண் தொழிலின் தொன்மையையும் சிறப்பையும் உணர்த்துகிறது. நான்காவது தரவு-சுக்கானுடன் கூடிய கப்பல். நமது அயல்நாட்டு வாணிகச் சிறப்பை உணர்த்துகிறது. சிந்து சமவெளி நாகரிகம் கடலோரப் பரப்பைச் சார்ந்து வளர்ந்த நாகரிகம். குஜராத் பகுதியில் உள்ள லோத்தல் பகுதியில் கிடைத்த மிகப்பழைமையான துறைமுகம், கடல் வணிகத்தில் நாம் முன்னணியில் இருந்ததைச் சாட்சிப்படுத்திறது. தமிழனின் நெடுங்கடல் திசையறிவு, அஞ்சாமை, கடல் சார்ந்த நெய்தல் வாழ்க்கை போன்ற பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் விதமாக அந்தத் தரவைப் பயன்படுத்தினோம். ஐந்தாவது தரவு -கொம்புடைய கலைமான். நமது கலையின் பெருமையை உணர்த்தும் விதமாக இதனைப் பயன்படுத்தியுள்ளோம். ஆறாவது தரவு-சங்க இலக்கியத்தில் புறத்திணையில் வரும் வேலன் வெறியாட்டுக் குறித்தது. அதன் அடையாளமாக இந்தத் தரவைப் பயன்படுத்தினோம். ஏழாவது தரவு-நிரருந்தும் காளை. எழு தரவுகளையும் நமது வாழ்க்கை முறை, கலாச்சாரம் ஆகியவற்றின் சிறப்பான விழுமியங்களை எடுத்துக்கூறும்  வகையிலேயே தேர்வு செய்தோ..” என்றார் ராமச்சந்திரன்.

The Three Mistakes of My Life , நிலா நிழல் மற்றும் சுஜாதா

•April21, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

சேத்தன் பகத்தின் “The Three Mistakes of My Life” நாவல் படித்தேன். மூன்று நண்பர்களின் வாழ்க்கையை கொஞ்சம் கிரிக்கெட்,காதல், வியாபாரம், நிலநடுக்கம், மதக் கலவரம் என்று கலந்து நன்றாக எழுதி இருந்தார். அவரது முதல் நாவல் “Five Point Someone – What not to do at IIT” நம்பக் கூடிய கதை. அடுத்த நாவலான “One Night @ the Call Center” நம்ப முடியாததாக இருந்தது. மூன்றாவதான இந்த நாவல் முந்தைய இரண்டிற்கும் இடைப்பட்டதாக உள்ளது.

இதைப் படித்ததும் என் நினைவிற்கு வந்த மற்றொரு நாவல் சுஜாதாவின் “நிலா நிழல்”. “The Three Mistakes of My Life” -ல் இருந்த நிலநடுக்கம், மதக் கலவரம் இதில் இல்லை. ஆனால் அதைவிட மிக சுவாரஸ்யமான கதையும், எழுத்து நடையும் கொண்டது. திருச்சியில் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது தில்லை நகர் திடலில் புத்தகக் கண்காட்சி நடந்தது. யாரும் கூட வராத நிலையில் தனியாக சென்றேன். இந்தப் புத்தகமும், அப்துல் ரகுமானின் “பித்தன்” புத்தகமும் வாங்கினேன். இந்தப் புத்தகம் வாங்கிய நோக்கம் புத்தகத்தின் பின்னால் இருந்த இந்த வாக்கியம்.

“குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான நிலா நிழல், குழந்தைப் பருவத்தை இழந்து இளமையை அடையும் காலத்தின் வேட்கையையும் கனவையும் கவித்துவத்துடன் வரைந்து செல்கிறது.”

நாமளும் அந்த ஸ்டேஜ்லதான இப்போ இருக்கோம். ஏதாவது படிச்சி தெரிஞ்சிக்கலாம்னுதான் வாங்கினேன். இந்த புத்தகம் வாங்கும் வரை நான் படித்த சுஜாதாவின் எழுத்துகள் விகடனில் வெளிவந்த “கற்றதும் பெற்றதும்”, “ஸ்ரீரங்கத்து தேவதைகள்”. இதுதான் அவர் எழுதி நான் படித்த முதல் நாவல். கூட்டம் இல்லாத ரம்பா தியேட்டரில் “பாண்டவர் பூமி” கடைசிக் காட்சி தனியாக பார்த்து விட்டு ரூம் வந்தபோது ரொம்ப லேட்டாகிவிட்டது. தூக்கம் உடனே வரவில்லை. சரி இந்த புத்தகத்தைப் படிப்போம் தூக்கம் வரும் என்று நம்பினது தப்பா போச்சு. முழு புத்தகமும் படித்து விட்டுதான் தூங்கச் சென்றேன்.

இரண்டு வாரத்திற்கு முன் வீட்டிற்கு சென்ற போது தேடிப் பிடித்து, மின் வெட்டு, ஒலிபெருக்கியில் “வெளிநாடு ஒன்றில் பெட்ரோலின் விலை பத்து ரூபாய். ஆனால் நம் நாட்டில்…” என்று கூவிக் கொண்டிருந்த அரசியல் கட்சிக் கூட்டக் கூச்சலுக்கு நடுவில் மீண்டும் படித்து முடித்தேன். இந்த முறை கதையை மேலும் ரசிக்க முடிந்தது. காரணம் கதையில் வரும் மும்பை காட்சிகளும் எனது நான்கு வருட மும்பை வாசமும்தான். முகூந்தன் என்னும் நம் கதை நாயகன் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவன். எப்படி அவன் தனது கண்டிப்பான தந்தையை மீறி ஸ்ரீரங்கத்தில் இருந்து மும்பை சென்று விளையாடுகின்றான், அங்கே எப்படி காதல் வயப்படுகின்றான் என்பதுதான் கதை. திரைப்படம் எடுக்கத் தோதுவானது. கிரிக்கெட் ஆகட்டும், மும்பை ஆகட்டும் அவரின் ஆழ்ந்த அறிவும், அதை எளிமையாக விளக்கிச் சொல்லிய விதமும் எத்தனை பாராட்டினாலும் தகும். இது போதாதென்று இரண்டு மூன்று கிளுகிளுப்பூட்டும் காட்சிகள் வேறு. இன்றிலிருந்து 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த நாவல் எப்படி இன்று படித்தாலும் புத்தம் புதிதாய் உள்ளது என்பதே சுஜாதாவின் எழுத்துக்கான வெற்றி.

சுஜாதா பற்றி சுஜாதாவே ஒரு பத்திரிக்கையில் கூறியது…

**********************************
‘பாலம்’ என்கிற கதை விகடனில் வெளிவந்தபோது அது ஒரு திருப்புமுனையாக என் எழுத்து வாழ்வில் அமைந்தது. ஓரளவுக்கு சிறுகதைத் தந்திரங்கள் பிடிபட்டு விட்டன. ‘அதிர்ச்சி’க்கும் ‘பாலம்’ கதைக்கும் இடையே ஆறு ஆண்டுகள் நிறைய தமிழ், ஆங்கிலச் சிறுகதைகள் படித்தேன். நான் படித்த அனைவரும் என் எழுத்தின் துரோணர்கள். நான் சைன்ஸ் படித்தவன். இயற்பியல் மாணவன். தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்தவன். ஸ்ரீரங்கத்துச் சூழ்நிலை, கட்டுப்பாடான நாட்கள், ஏழ்மையுமில்லாத பணக்காரத்தனமும் இல்லாத நடுவாந்தர வசதிகள், பிரபந்தத் தமிழ் இவை அனைத்தையும் கலந்து ஒரு மிக்ஸி சுழற்றலில் ஒரு எழுத்தாளன் உருவானால் அது நான்.
**********************************

கொக்குக் குஞ்சுகளும் மூன்று நாட்களும் – பகுதி III

•April21, 2010 • 1 மறுமொழி

பகுதி I
பகுதி II

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ‘ஸ்ரீரங்கத்துக் கதை’ களின் கேவி, கோவிந்தன், குண்டு ரமணி, வி.ஜி.ஆர் மற்றும் சுஜாதா இவர்களுடன் பொழுது கழிந்தது. போதாதற்கு புகைபடக் கலை பற்றிய பத்திரிக்கை, இணையம், செய்திதாள், சமையல், தூக்கம் என இவையும் சேர்த்துக் கை கொடுத்தன. வாழ்க ஞாயிற்றுக்கிழமைகள். ‘டிரிங்கிள்வாடி’ என்ற மலை பிரதேசம் செல்லலாம் என்ற திட்டத்தை முந்தினமே கைவிட்டாயிற்று.

திங்கள் கிழமை – விஷேச விடுமுறை தினம். ஒரு திட்டத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. பல நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கும் ‘தாத்தா வீடு’ பற்றி எழுத வேண்டும் என்பதுவே அது. அதை எழுதத்தான் உட்கார்ந்து இங்கே வேறு எங்கேயோ பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. நானும் சராசரி மனிதன் தானே. மற்றவற்றின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கொக்குக் குஞ்சுகளில் ஒன்றைக் காணவில்லை. கொஞ்சம் தேடியதில் அந்த குஞ்சு கொடுமைக்கார காகங்களுக்கு இரையாகிக் கொண்டிருந்தது. மற்ற இரண்டு குஞ்சுகள் பயந்து கூட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தன. இதை நான் எழுதிக் கொண்டிருந்த வேளையில் மற்றொரு குஞ்சையும் காணவில்லை. கண்களால் பார்க்க முடிகிறது. ஆனால் எதுவும் செய்வதற்கியலவில்லை. அந்தக் குஞ்சுகளின் பெற்றோரும் அருகில் இல்லை. அருகில் இன்னொரு கூட்டில் இன்னொரு கொக்கு தனது அடைகாக்கும் தொழிலை எந்த சலனமும் இல்லாமல் செவ்வனே செய்து கொண்டிருந்தது.

அமைதியின் சின்னாமாகக் கூறப்படும் புறா ஒன்று கிளைவிட்டு கிளை இரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றது!!! :(

மூன்று நாட்கள் இப்படியாக ஒரு வருத்தமான முடிவுக்கு வந்தது…

—முற்றும்—

கொக்குக் குஞ்சுகளும் மூன்று நாட்களும் – பகுதி II

•April21, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

பகுதி I

மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை சனி, ஞாயிறு மற்றும் திங்கள், மஹாராஷ்டிர புத்தாண்டான ‘குடி படுவாவை’ முன்னிட்டு. யோசித்து வைத்திருந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதில் ஒரு வருத்தம். ‘பித்தல்கோரா’ குகைக் கோயில்களுக்குச் சென்றுவிட்டு, ஒளரங்காபாத் செல்லலாம் என்ற திட்டம்தான் அது. சில தகவல்கள், எதிர்பார்த்த நண்பனிடம் இருந்து சரியான நேரத்தில் வந்திருந்தால் கிளம்பி இருப்பேன் இதை எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். “எல்லோரா” குகைக் கோயிலின் சிறிய புகைப்படத்தை தவறுதலாக “மஹிம்சால்” எனக் கொண்டதால் அங்கு செல்லும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் உண்மை தெரிந்தபின் அந்த விருப்பம் புஸ்ஸாகிவிட்டது. உண்மைகள் எப்போதும் சுவாரஸ்யமற்றதாக இருப்பது ஏன் என்று இன்று வரை புரியவில்லை.

சனிக்கிழமை சிறிது ஓய்வெடுத்துவிட்டு (வேறென்ன தூக்கம்தான்!!!) மதியம் அல்லது சாயும் காலம் கோட்டை பகுதி மார்கெட்டுக்குச் சென்று அடுத்த வாரம் கேரளாவில் நடக்கவிருக்கும் நண்பனின் திருமணத்திற்கு ஏதேனும் புராதனமான பொருள் பரிசளிக்க வாங்கலாம் என்று அடுத்த திட்டம் தீட்டப்பட்டது. இது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும் நண்பனை கைபேசியில் இணைத்தேன். அரைமனதோடு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுவதாகக் கூறினான். ஆனால் கூப்பிடவில்லை. நேரம் கடந்து நான் கூப்பிட்ட போது வரவில்லை என்று கூறினான். தனியாகவே போயிருந்திருக்கலாம். ஏனோ அதுவும் செய்யவில்லை. சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ மேல் குற்றம் சாட்டலாம். இப்படி குற்றம் சாட்டுவதை எத்தனை நாட்கள் செய்ய முடியும்.

பல நாட்கள் கழித்து இப்படி சும்மா இருந்ததால் ரொம்ப போர் அடித்தது. கைபேசியில் சில உரையாடல்கள் செய்து பார்த்தேன். எதுவும் வேலைக்காகவில்லை. இறுதியில் கல்கியின் ‘சோலைமலை இளவரசி’ துணை கொடுத்தாள். வித்தியாசமான கதை சொல்லும் பாங்கு. மன்னர்கள் காலத்து சரித்திரத்தையும், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் ஒரே கதையில் கொண்டு வந்திருந்தார் கல்கி அவர்கள். அவரது சீரான நடையில் ஒரு கவர்ச்சி. அதில் வரும் காதலில் ஒருவித ஈடுபாடு. முடிவை யூகிக்க முடிந்த போதும், படிக்கும் ஆர்வம் சிறிதும் குறையவில்லை. சிறிய மாற்றங்களுடன், ஏறக்குறைய எதிர்பார்த்த முடிவு. இருந்தாலும் கல்கி தனது பெயரை நிலை நாட்டி உள்ளார்.

மகிழ்வுந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது எதாவது திரைப்படம் பார்க்கலாம் என்ற எண்ணம் தொற்றிக் கொண்டது. இரவு பதினொன்றரை மணிக்கு கடைசி காட்சி. இரண்டு நண்பர்களைக் கூப்பிட்டுப் பார்த்தேன். வரவில்லையென்று தாழ்மையுடன் மறுத்து விட்டனர். சரி நல்லதாய் போயிற்று என்று ஒரு ஊத்தப்பமும், இஞ்சி – எலுமிச்சை பழச்சாறும் குடித்து விட்டு தியேட்டருக்கு கிளம்பினேன். தனது ஐந்து வயது பையனுடன், வேலை இல்லாமல், இருக்க வீடு இல்லாமல் கையில் பணம் இல்லாமல், இலட்சியத்துடன் பாடுபட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் பற்றிய திரைப்படம். நல்ல கதைக்களம், காட்சி அமைப்புகள், திரைக்கதை, நல்ல நடிப்பு. ஒரு துளி கண்ணிர், சின்ன புன்னகையுடன் நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியுடன் திரையரங்கத்தை விட்டு வெளியேறினேன்.

தொடரும்…

கொக்குக் குஞ்சுகளும் மூன்று நாட்களும் – பகுதி I

•April21, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

இதை நான் எழுதியது 19-மார்ச் 2007.

அழகழகான மூன்று கொக்குக் குஞ்சுகள் அவைகளைப் பெற்றோருடன் விளையாடிக் கொண்டிருந்தன. நான்காவது மாடியில் இருந்த எங்கள் அபார்ட்மன்டின் அருகில் வளர்ந்திருந்த மரத்தில் அவற்றின் வீடு. இளங்காலைக் கதிரவனின் கதிர்கள் வருட ‘Backlitted’ குஞ்சுகள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தன. மும்பை மாநகரிலே அபார்ட்மன்ட் அருகில் மரங்களா? என்று ஆச்சரியப்படலாம். முலுன்ட் (Mulund) எனப்படும் புறநகர்களின் இளவரசன் ராஜ்ஜியத்தில் இந்த அதிசயத்தைக் காண முடியும். அதுவும் இரயில் நிலையத்தின் கிழக்குப் பக்கம் உள்ள பகுதியில் நிறைய மரங்கள். வீட்டு வாடகை கொஞ்சம் அதிகமானாலும் நானும் என் நண்பனும் இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் அதிர்ஷ்டத்தின் உயரமாக(Height of luck) வீட்டோடு வந்த மாடியையும் சொல்ல வேண்டும்.வீடு அவ்வளவு சுத்தமாக இல்லாவிட்டாலும் பறவைகளின் இன்னிசையோடான அதிகாலையையும், அபார்ட்மன்டுகளுக்கு நடுவில் அஸ்தமிக்கும் சூரியனையும் ரசிக்க முடியும்.அது மட்டுமல்லாது கீழே செல்லும் சாலையிலும் ‘காட்சிகள்’ நன்றாகவே காணக் கிடைக்கும். அரைமணி நேரம் கவனித்தால் இருபது, முப்பது இளம் மற்றும் அழகான மும்பை பெண்களின் தரிசனம் Bird’s Eye View’-ஆக கிடைக்கும்.

சில நாட்களாக கீழே பறவைகள் பார்ப்பதை விட்டுவிட்டு சம உயரத்தில் நிஜப் பறவைகளான கொக்குகள் கூடு கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கோடைக்காலம் சற்று முன்கூட்டியே வந்து ‘Hi’ சொல்லிக் கொண்டிருந்ததால் மரங்கள் வெகு சீக்கிரமாக இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன.முதலில் கண்ணுக்குத் தெரிந்திராத கூடுகள் இப்போது இலைகளற்ற மரங்களால் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருந்தன. பெண் கொக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் நாள் முழுவதும். சில நேரங்களில் எழுந்து உடற்பயிற்சி செய்யும், நின்ற வண்ணம் சிறகுகளை விரித்த வண்ணம் மயிர் கூச்செரியும் வண்ணம். ஆம் அதன் தலையில் ஒரு விஷேசக் கொண்டை. கொக்குகளிலும் பிராமணர்கள் உண்டோ? Hmm எந்த பிராமணன் கொண்டை வைத்திருக்கின்றான் இந்த நவயுகக் கலிகாலத்தில்.பிராமணர்கள் அல்லாதவர்கள்தான் இப்பொழுது முடி வளர்த்துக் கொள்கிறார்கள். கொண்டையும் வைத்துக் கொள்கிறார்கள் இந்த மும்பை மாநகரத்தில். மற்ற நகரங்களில் எப்படி என்று தெரியவில்லை.ரோட்டில் செல்லும் போது பல நேரம் குறை பட்டுக் கொள்ள நேர்கிறது. குடுமிகளையும், நீண்ட கூந்தல்களையும் பார்த்துத் தவறாக ‘சைட்’ அடித்துக் கொண்டதற்காக. பெரும்பாலான பெண்கள் கிராப்பு வைத்துக் கொள்வதும், பெரும்பாலான ஆண்கள் நீளமாக கூந்தல் வளர்த்துக் கொள்வதும்தான் இங்கு இப்பொழுது நாகரிகமாம்.

இது இருக்கட்டும்… நான் சொல்ல வருவது என்னான்னா… நாளைக்கு பார்க்கலாமே…

நான் கடவுள் – என் மனநிலை!!!

•April21, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

மு.கு: இந்தப் பதிவில் உள்ளவை அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்கள். யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் எழுதப்படவில்லை.

படம் பார்த்து முடித்த பிறகு மனதில் தோன்றிய கேள்வி “நான் ஏன் இந்தப் படத்தைப் பார்த்தேன்” என்பதே. ஒத்துக் கொள்கிறேன் எல்லாரும் நன்றாக நடித்துள்ளார்கள், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என எல்லாமும் நன்றாக உள்ளது. ஆனால் இந்தப் படம் எடுக்கப்பட்ட நோக்கம் என்ன என்ற கேள்விக்கு எத்தனை முறை யோசித்தாலும் விடை கிடைக்க மறுக்கிறது அல்லது அந்த விடை சரியானதாகத் தோன்றவில்லை. இந்த காலத்தில் எந்தப் படம் மெசேஜ் கொடுப்பதற்காக எடுக்கப் படுகின்றது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒத்துக் கொள்கிறேன்.ஆனாலும் படத்தில் காட்டப் படும் விஷயங்களை பார்த்தப் பிறகு மனது சாந்தப்பட மறுக்கிறது.

அகோரிகள் என்று ஒரு இனத்தவர்கள் உள்ளனர், அவர்களது வாழ்க்கை முறை இதுதான் என்பதும், பிச்சைக்காரர்கள் வாழ்கையிலும் சோகத்தைத் தவிர, நட்பும். சின்ன சந்தோஷங்களும் உள்ளன என்பதும், கீழ்நிலையில் உள்ளோரின் குறைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்யும் கொடூர மனம் படைத்த மனிதர்களும் உலகில் உள்ளனர் என்பதும் இப்படம் மூலம் இயக்குனர் சொல்ல விழைந்த நோக்கங்களாக இருக்கலாம். ஆனால் சொன்ன விதம்தான் கொஞ்சம் மனதைப் பிசைகிறது.

வில்லன் உடல் ஊனமுற்றோரை கொடுமைப்படுத்தும் காட்சி திரைமறைவாகக் காட்டி இருப்பது சென்சார் கண்களில் வேண்டுமானால் மண்ணைத் தூவி இருக்கலாம். ஆனால் அந்தக் காட்சி மனதில் ஏற்படுத்தும் வலி மிக ஆழமானது. பிச்சைக்காரர்கள், உடல் ஊனமுற்றோர்களின் அவல நிலையை ரொம்ப நேர்மையாக பதிவு செய்திருப்பது என்னவோ கொஞ்சம் அதிகப்படியாக உள்ளது. பரிதாபத்திற்கும், இரக்கத்திற்கும் கூட ஒரு எல்லை உள்ளது போல. அது மீறப்படும் பொழுது பார்க்கமுடிவதில்லை. ஒரு வெறுமையான மனநிலையில் திரையரங்கத்தை விட்டு வெளிவந்தேன்.

“நானும் கடவுள்” என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் ஒருவர் சொன்னார். பேசாமல் அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருந்தால் மன நிறைவும், தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கும்.

நிழல்கள் (1980) – திரைப்பார்வை

•April21, 2010 • கருத்துத் தெரிவிக்கவும்

சமீபத்தில் பாரதிராஜாவின் இந்தத் திரைப்படத்தை ‘சின்ன கவுண்டர்’, ‘மனதில் உறுதி வேண்டும்’ படங்களுக்கு நடுவில் பார்க்க முடிந்தது. நான் பார்க்க ஆரம்பித்திருந்த போது வைரமுத்து அவர்களின் திரைப் பிரவேசப் பாடலைத் தவற விட்டிருந்தேன். ஆனாலும் பல நாட்களாக இந்தப் படத்தை பார்க்க வேண்டுமென்ற கனவு நனவாகியது.திரைப்படங்களில் வேலையில்லாத் திண்டாட்டம், சினிமாவில் இசையமைப்பாளர் வாய்ப்பு ஆகிய விஷயங்களுக்கு இந்தப் படம்தான் ஒரு முன்னோடியாம்.

கோபி – படித்த பட்டதாரி. வேலை தேடி அலைகின்றான். கிடைத்தபாடில்லை. அந்த ஏக்கமும், அலைகழிக்கும் சமுதாயமும் அவனை நிலைகுலைய வைக்கின்றன.
பிரபு – வசதியான குடும்பத்து பையன். பொழுதுபோக்குக்காக கல்லூரி செல்கிறான். இசையில் அளவில்லாத பற்று. நட்பைக் காதல் என்று தவறுதலாகப் புரிந்து கொண்டு அதன் பலனை கடைசியில் அனுபவிக்கின்றான்.
ஹரி – இசையமைப்பாளர் கனவுடன் வாழ்கின்றான். வழக்கம் போல வாய்ப்பு கிட்டி, இசை பதிவு செய்யும் நாளில் தடை படுகின்றது. தன் இயலாமையை நினைத்து மனம் நொந்து போகின்றான் எள்ளி நகையாடியபடியே.
மகாலட்சுமி – கதையின் நாயகி. முதலில் மோதல். பிறகு காதல். கொஞ்சம் பரிவு. ஆனால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளால் கடைசியில் இவள் நிலை பரிதாபத்திற்குரியதாகிறது.

பாரதிராஜாவின் நகரத்துப் படங்களில் இதுவும் ஒன்று (மற்ற படங்களை பின்னூட்டத்தில் சொல்லலாம்!!!). பிந்தைய எழுபதுகளில் இளைஞர்களின் வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டி உள்ளார் ராஜா. பல புதுமுகங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளனர் இந்தப் படம் மூலமாக.’ நிழல்கள்’ ரவி, ராஜசேகர், சந்திரசேகர் மற்றும் வைரமுத்து :)

மற்றொரு ராஜாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.இசையும், பாடல்களும் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய தூண்கள். ‘இது ஒரு பொன்மாலை பொழுது’, ‘பூங்கதவே தாள் திறவாய்’, ‘மடை திறந்து தாவும் நதி’ – இந்த மூன்று பாடல்களும் இன்று வரை புதிதாய், கேட்ட உடனே மனதை, கை, கால்களை தாளமிட வைக்கும் மெட்டுக்கள், வரிகள்.

ஆனால் இந்தப் படம் தோல்வி அடைந்தது அந்த காலத்தில். இதே சமயத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை மையமாக வைத்து வெளிவந்த படம் மற்றொரு சிகரம் கே.பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’. இது ஒரு வெற்றிப் படம். கமல் ஹாசன், ஸ்ரீதேவி, நல்ல முடிவு என்ற விஷயங்கள் நிழல்களை ஓரம் தள்ளிவிட்டதாகக் கேள்வி.

நிழல்களின் முடிவில் வரும் வாசகம் (பாரதிராஜவின் குரலில்):
இப்படி நம் தேசத்தின் தெருக்களில் உருவங்களைத் தொலைத்துவிட்டு திரியும் நிழல்கள் ஒரு கோடி
இவர்கள் உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல தீர்வுக்கும்….

யாமம் – வாசிப்பனுபவம்

•April5, 2010 • 2 மறுமொழிகள்

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனக்குமான தொடர்பு அவரது ‘துணையெழுத்து’ விகடனில் தொடராக வந்த காலத்தில் இருந்து தொடர்கிறது. அந்தத் தொடர்பு ‘கதாவிலாசம்’,'பாபா’,'சண்டக்கோழி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘பீமா’, ‘தாம் தூம்’ , கொஞ்சம் ‘தேசாந்திரி’, ‘உறுபசி’, ‘இலைகளை வியக்கும் மரம்’, www.sramakrishnan.com என வளர்ந்து இன்று இன்னும் நெருக்கமாக (ஆமாம் அவர் கையெழுத்துடன் நன்றி: 2009 புத்தகக் கண்காட்சி) ‘யாமம்’ வரை வந்துள்ளது. இவரது கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் இடையே சிறிய இடைவெளிதான். கதைகளில் பல அந்தரங்க விஷயங்களை ரொம்ப வெளிப்படையாக எழுதி இருப்பார். இவரது ‘உறுபசி’ படித்து விட்டு கொஞ்ச நாட்கள் மனசு ரொம்ப பாரமா இருந்தது. அது அப்படி ஒரு கதை. அது போக இவரது கதை நடை.

யாமம் – நடு இரவு அல்லது இரவின் ஒரு பகுதி என்று பொருள். ஜாமம் என்று வழக்கொழிந்து கொண்டிருக்கும் சொற்களில் ஒன்று.இந்த நாவலின் மையச்சரடு யாமம் என்ற சுகந்தமான அத்தர் (வாசனை திரவியம்) பற்றியதா? அல்லது அந்த அத்தரைத் தயாரிக்கும் குடும்பத்தைப் பற்றியதா? அல்லது அந்த அத்தரை உபயோகப்படுத்தும் மனிதர்களைப் பற்றியதா? அல்லது அந்த அத்தரைப் போல் அல்லாமல் பலவித வாசனைகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும், காரிருள் சூழ்ந்த யாமம் மற்றும் அதன் ரகசியங்கள் பற்றியதா? இவை மட்டுமின்றி இன்று சென்னை என்று அன்போடு அழைக்கப்படும் மதராப் பட்டிணம் எப்படி உருவாகி வளர்ந்தது என்பதையும் கதையின் ஊடகமாக லேசாக நுழைத்துள்ளார். இது ‘ஒரு’ கதை அல்ல. ஒரு நாயைத் தொடர்ந்து செல்லும் பண்டாரத்தின் கதை. யாமமாகிய அத்தரைத் தயாரிக்கும் அப்துல் காதரின் குடும்பக் கதை. படிப்பதற்காக இங்கிலாந்து செல்லும் தம்பி, படிக்க உதவி செய்யும் அவரது அண்ணன், அண்ணன் படும் மன சஞ்சலத்தின் கதை. தனது சொத்து அனைத்தையும் இழக்கும் தருவாயில் இருக்கும் பணக்காரரான கரையப்பச் செட்டியார், அவரது அந்தரங்க நாயகியான இங்கிலாந்து நாட்டு விலை மாதர் அவர்களின் கதை. இந்த நான்கு கதைகளின் மூலமாக எப்படி யாமமும், யாமமாகிய அத்தரும் கலந்து வாசம் வீசுகின்றன என்பதுதான் இந்த நாவல்.

கதையை விட எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சொற் பிரயோகமும், கதை நகர்த்திச் செல்லும் பாணியுந்தான் நம்மை கவர்கின்றது. மிகுந்த கணமான விஷயங்களைத் தாங்கிக் கொண்டு கதை மெல்லமாக பயணம் செய்கிறது. அவரது உவமானங்களும், சூழ்நிலையை விவரிக்கும் பாங்கும் மிகவும் சிறப்பு. இங்கிலாந்தையும், சென்னையையும், அந்த மலைத் தொடரையும் (ஊட்டி என்று நினைக்கின்றேன்) வர்ணிக்கும் விதம் பாராட்டுக்குறியது. பாத்திரப் படைப்பும், சில கதாபாத்திரங்களை வேண்டுமென்றே மறையச் செய்து ஏக்கத்தை உண்டு பண்ணிய விதமும் மிக நன்று. இவற்றிற்காகத்தான் எஸ்.ராமகிருஷ்ணன் மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து தனித்து அறியப்படுகிறார்.

இந்த நாவலைப் பற்றிய சிறு குறிப்பு. புத்தக பின் அட்டையில் இருந்து எடுக்கப்பட்டது.

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புதத்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.

 
Follow

Get every new post delivered to your Inbox.